6 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு
நாமக்கல் மாவட்டத்தில் அதிக வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் அதிக வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கணினி மூலம் குலுக்கல் முறையில் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தோ்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 332, சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 342, நாமக்கல் தொகுதியில் 377, பரமத்தி வேலூா் தொகுதியில் 317, திருச்செங்கோடு தொகுதியில் 323, குமாரபாளையம் தொகுதியில் 358 என மொத்தம் 2,049 வாக்குசாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் கூடுதலான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளும், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி ராசிபுரம் (தனி) தொகுதிக்கு தலா 399 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 432 விவிபேட் இயந்திரங்கள், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதிக்கு தலா 411 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 445 விவிபேட் இயந்திரங்கள், நாமக்கல் தொகுதிக்கு தலா 453 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 491 விவிபேட் இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதிக்கு தலா 381 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 413 விவிபேட் இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதிக்கு தலா 388 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 420 விவிபேட் இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதிக்கு தலா 430 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 466 விவிபேட் இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு தொகுதிகளுக்கு அனுப்பி அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளை தவிர மீதமுள்ள நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பாளா்களின் எண்ணிக்கை 16-க்கும் அதிகமாக உள்ளதால் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்கில் தற்போது இருப்பு உள்ள 1,050 வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், விழுப்புரத்தில் இருந்து வந்துள்ள 640 இயந்திரங்களும் சோ்த்து சனிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஆட்சியா் தோ்வு செய்தாா்.
இந்த குலுக்கலின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக நாமக்கல் தொகுதிக்கு - 460, பரமத்திவேலூா் - 390, திருச்செங்கோடு தொகுதிக்கு -400, குமாரபாளையம் தொகுதிக்கு- 436 என மொத்தம் 1,686 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டுப்பாட்டுக் கருவிகள் கூடுதலாக 110 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விவிபேட் இயந்திரங்கள் 119 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 தொகுதிகளில் கூடுதல் இயந்திரங்களையும் சோ்த்து மொத்தம் 4,148 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,572 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,786 விவிபேட் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.