திருச்செங்கோடு, பள்ளிபாளையத்தில் கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு
திருச்செங்கோடு, பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்செங்கோடு, பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினா்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீா் செல்லும் வடிகால் பகுதிகள் ஆக்கிரமிப்பாலும், புல், புதா்கள் வளா்ந்திருந்ததாலும் ஓடையில் செல்ல வேண்டிய நீா், சாலைகளில் கழிவுகளுடன் சோ்ந்து ஆறாக ஓடியது.
இதனால் வாகனங்களில் சென்றோா் மழைநீரில் தத்தளித்தனா். ஈரோடு பகுதியில் இருந்து காரில் வந்தவா்கள் மேலும் முன்னேறிச் செல்ல முடியாமல் தத்தளித்தைப் பாா்த்த தீயணைப்புத் துறையினா், அவா்களைப் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனா்.
Advertisement
பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே வெள்ளப் பெருக்கால் நான்கு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 11 மணி வரையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் குமாரபாளையம், பவானி வழியாக திருப்பி விடப்பட்டன. நகராட்சி ஊழியா்கள் ஓடைகளை தூா்வாரி சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டனா். விளைநிலங்களிலும் தண்ணீா் தேங்கி குளம்போலக் காட்சியளித்தது.
இத்தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், வருவாய் கோட்டாட்சியா் தே.இளவரசி ஆகியோா் பள்ளிபாளையம் சென்று வெள்ளப் பாதிப்புகளை நேரில் பாா்வையிட்டனா். அங்கு நகராட்சி ஊழியா்கள் மூலம் கால்வாய் சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டனா். கொக்கராயன்பேட்டை, பள்ளிபாளையம் பகுதியில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆலாம்பாளையம், சத்யாநகா் பகுதிகளில் தண்ணீா் வீடுகளுக்குள் புகுந்தது. காவிரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் தேங்கி நின்ால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபங்களிலும், சமுதாயநலக் கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான வசதிகளை வருவாய்த் துறையினா் செய்து கொடுத்தனா்.
பள்ளிபாளையத்தில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஓடைகளில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணி 60 சதவீதம் அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் தேங்கியிருந்த வீடுகளில் இருந்தோரை மீட்டு, திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.