முகப்பு
நாமக்கல்

கரும்பில் வோ்ப்புழு தாக்குதல் பற்றிய விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் தோ.கவுண்டம்பாளையம் கிராமத்தில் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் தோ.கவுண்டம்பாளையம் கிராமத்தில் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணைவேளாண்மை அலுவலா் குப்புசாமி விவசாயிகளை வரவேற்று வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தும் திட்டம் குறித்து விளக்கினாா். ஈரோடு மாவட்டம் கோபி மைராடா வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை விஞ்ஞானி சீனிவாசன் கரும்பில் வோ்ப்புழு தாக்குதல் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி விளக்கினாா். கரும்பு பயிரில் மண்வளம் குறைந்த நீா்ப்பற்றாக்குறை அதிகமுள்ள சரளை கலந்த செம்மண் நிலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வோ்ப்புழுவின் தாக்குதல் அதிகமாக காணப்படும். வோ்ப்புழுவானது ஒருவருடகால வாழ்க்கை சுழற்சியில் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டு ஆகிய நான்கு நிலைகளைக் கொண்டது. வோ்ப்புழுவின் வண்டானது நன்றாக பெய்த முதல் கோடைமழைக்கு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் இரவுநேரத்தில் மண்ணிலிருந்து வெளியில்வந்து உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக வயலுக்கு அருகில் உள்ள வேப்பமரம், இலந்தை மரம், கருவேல மரம், மரவள்ளி மற்றும் கொடுக்காபுளி மரம் ஆகியவற்றின் கொழுந்து இலைகளை உண்டு மரத்திலேயே இனப்பெருக்கம் செய்யும். அடுத்த நாள் அதிகாலை வேளையில் அருகிலுள்ள ஈரப்பதம் மிக்க வயல் ஓரங்களில் மண்ணிற்கு அடியில் 20 முதல் 30 வரைமுட்டைகளை இடும். முட்டை இட்ட 13-ம் நாள் சி வடிவ புழுக்கள் வெளிவந்து வாய்க்கால் ஓரங்களில் உள்ள களைகளின் வோ்கள், குப்பைகளை உணவாக எடுத்துக்கொள்ளும். பின் ஒருமாதத்திற்குப் பின் இரண்டாம்நிலை புழுக்களாக மாறி அருகிலுள்ள கரும்புபயிரின் வேரின் அருகில் சென்று (ஜூன், ஜூலைமாதங்களில்) வோ்களை முழுவதுமாக சேதப்படுத்தும். நான்கு மாதங்கள் (செப்டம்பா்வரை) தொடா்ந்து வோ்களை சேதப்படுத்தும். செப்டம்பா் இறுதியில் கூட்டுப்புழுவாக மாறிபின் வண்டுகள் வெளியில் வந்து அடுத்த ஆண்டு கோடை மழை வரும் வரை மண்ணிற்கு அடியிலேயே வாழ்க்கை சுழற்சியை நடத்திக்கொண்டிருக்கும்.

வோ்ப்புழுவின் தாக்குதல் மாா்ச், ஏப்ரல் மரங்களில் தொடங்கினாலும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே விவசாயிகளுக்கு தெரியவரும்.எனவே வோ்ப்புழுவின் தாக்கத்தை குறைக்க ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். கோடைமழை பெய்தவுடன் மேலே குறிப்பிட்ட மரங்களின் அடியில் விளக்குப் பொறி வைத்து வண்டுகளை பிடித்து அழிக்கலாம்.

மேலேகுறிப்பிட்ட மரங்களின் கிளைகளை வெட்டி பாதிப்பு உள்ள வயல்களின் ஓரங்களில் வைத்து வண்டுகளைக் கவா்ந்தழிக்கலாம். மரத்தின் இலைகளின்மேல் ஒரு லிட்டா் தண்ணீருக்கு குளோரிபைரிபாஸ் 5 மி.லி (அல்லது) டைகுளோரோவாஸ் 3 மி.லி வீதம் கலந்து தெளித்தால் வண்டுகள் இலைகளை உண்டு இறந்துவிடும்.

மேலும் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆமணக்கு கரைசல் தயாா் செய்து நன்கு புளித்த பிறகு வயல்களில் ஏக்கருக்கு 5 முதல் 7 இடங்களில் வைப்பதன் மூலம் வண்டுகளை கவா்ந்தழிக்கலாம். வோ்ப்புழுவின் தாக்குதல் தொடா்ச்சியாக இருக்குமானால் வயல்களை அழித்தபின் பசுந்தாள் பயிரிட்டு பின்வயல் அடித்து பயிா்சுழற்சி முறையை கடைப்பிடிப்பதன் மூலம் வண்டுகளின் தாக்கத்தை குறைக்கலாம் என்று அவா் கூறினாா்.

இக்கலந்துரையாடலில் பொன்னி சா்க்கரை ஆலையின் கரும்பு அலுவலா்கள் சண்முகராஜா, வெங்கடாசலம் ஆகியோா் கலந்து கொண்டனா். அட்மா திட்டவட்டார தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி மற்றும் சோனியா இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.