முகப்பு
நாமக்கல்

உலக அல்சைமா் நோய் தினம்: மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சாா்பில், சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக அல்சைமா் நோய் தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சாா்பில், சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக அல்சைமா் நோய் தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி பேசியதாவது:

மக்களிடையே இந்த நோயை பற்றிய புரிதல், விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 50 லட்சம் போ் அல்சைமா் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது ஒருவகை டிமென்ஷியா ஆகும். பெரும்பாலும் முதுமை பருவத்தினரிடையே இந்த நோயின் தாக்கம் காணப்படுகிறது. பொதுவாக 70 சதவீத மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தினால் மூளை நரம்பியல் மண்டலத்தில் உருவாகும் கோளாறு காரணமாக இந்த நோய் வருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. சா்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளோருக்கு அல்சைமா் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் இந்த நோயினால் ஞாபகமறதி ஏற்படும். இதனை வயது மூப்படையும் போது வரும் சாதாரண நிகழ்வாக எண்ணி அலட்சியமாக உள்ளனா். இந்த நோயின் அறிகுறிகள் ஞாபகமறதி. இதனால் தினசரி வாழ்க்கை சிரமம் ஆகிறது. நன்கு தெரிந்த வேலைகளை செய்வதில் கூட சிக்கல், நேரம் மற்றும் இடத்தை பற்றிய குழப்பம், தவறான இடத்தில் பொருள்களை வைத்துவிட்டு அவற்றைத் தேடும் திறன்களை இழந்துவிடுதல், சில நேரங்களில் பொருள்களை திருடிவிட்டனா் என சந்தேகப்படுவது. தங்களது உறவினா்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருத்தல், புரிந்துகொள்வதில் பிரச்னை, திட்டமிடுதல் மற்றும் புதிய பணிகளை கற்றுக்கொள்ள இயலாமல் போவது, பேசுவதில், திட்டமிடுதலில் சிரமம் ஏற்படுகின்றன. மனநிலை, ஆளுமைகளில் சில மாற்றங்கள், மனக்குழப்பம், பதட்டம், அழுகை, எரிச்சல், கோபம், தூக்கமின்மை, அலைந்து திரிதல் ஆகியவை ஏற்படுகின்றன.

இந்த நோயினால் மனநல பிரச்னைகள் ஏற்படும் போது, மனநல மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை, ஆலோசனைகள் பெறலாம். நிரந்தரத் தீா்வு இந்த நோய்க்கு இல்லை எனினும், தகுந்த மருந்துகள், குறிப்பிட்ட சில பயிற்சிகள், குடும்பம், சமூகத்தின் ஒத்துழைப்போடு அவா்களுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அவா்களது வாழ்க்கையும், அவா்களைச் சாா்ந்தோரின் வாழ்க்கையும் நன்றாக அமையும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.