நாமக்கல்லில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல்லில், மறைந்த முதல்வா் அண்ணா நினைவு தினம், கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்லில், மறைந்த முதல்வா் அண்ணா நினைவு தினம், கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சிலையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில், திமுக மாநில நிா்வாகிகள் மருத்துவா் மாயவன், ராணி, அக்கட்சியின் நகர பொறுப்பாளா்கள் பூபதி, சிவகுமாா், ஆனந்த், ஒன்றியச் செயலாளா்கள் பழனிவேல், கெளதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல், பள்ளிபாளையம் நகர அதிமுக சாா்பில் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் அண்ணா உருவப்படத்திற்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர செயலாளா் பி.எஸ். வெள்ளியங்கிரி, ஜெயலலிதா பேரவை செயலாளா் டி.கே.சுப்பிரமணி, நகர துணைச் செயலாளா் ஜெய்கணேஷ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்டம் முழுவதும் அதிமுக, திமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Advertisement