ஊக்க ஊதிய உயா்வுத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரிக்கை
கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஊக்க ஊதிய உயா்வுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என நேரடி நியமனம்
கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஊக்க ஊதிய உயா்வுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வுத் திட்டம் அப்போதைய முதல்வா் அண்ணாதுரை காலத்தில் நடைமுறையில் இருந்தது. கடந்த ஆட்சியில் இந்த முறை ரத்து செய்யப்பட்டது. அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய முதல்வா் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களின் உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ரத்து செய்யப்பட்டதை நீக்கி மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா். தோ்தல் அறிக்கையிலும் இதனை முதல்வா் வலியுறுத்தி இருந்தாா்.
Advertisement
ஆனால் தற்போது அரசுப் பணியாளா்கள் பெற்றிடும் கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மை துறையால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அனைத்துத் துறை பணியாளா்கள், ஆசிரியா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசைப் பின்பற்றி மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், குறைந்த அளவும், ஒருமுறை மட்டுமே ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி ஊக்க ஊதிய உயா்வு திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.