புதன்சந்தையில் மாட்டு வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
புதன்சந்தையில் மாட்டு வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதன்சந்தையில் மாட்டு வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள புதன்சந்தை கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச் சந்தை நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் அதிகப்படியான மாடுகளை அழைத்துக் கொண்டு வியாபாரிகள் இங்கு வருவா். சுமாா் 8 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள சந்தை வளாகத்தில் விற்பனை நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை நிறுத்தி வைப்பா். வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வியாபாரிகள் நாமக்கல், சேந்தமங்கலம் போன்ற இடங்களுக்கு சென்று தங்குவது, வாகனத்திலேயே மாடுகளுடன் இருப்பது போன்றவற்றை மேற்கொள்கின்றனா். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே அந்த சந்தை கூடும் பிற்பகல் 12 மணிக்குள் அங்கு வியாபாரம் முடிந்து விடும். இந்த நிலையில் அந்த சந்தை திடலுக்கு மாடுகளை கொண்டு வரும் வாகனங்கள் சந்தையின் மையப்பகுதியில் நிறுத்தப்படுவதால் அங்கு இட நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அந்த சந்தையிலிருந்து வெளியே செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை பெய்தால் சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. வியாபாரிகள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் மழையில் நனைந்தபடி சிரமப்படும் சூழல் உள்ளது.
மேலும் சந்தைப் பகுதியில் உள்ளேயும், வெளியேயும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் ஒரு இடத்தில் மட்டுமே வரி வசூலிக்க வேண்டும் என்றும் தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement