முகப்பு
நாமக்கல்

மேட்டூா் அணை உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 மேட்டூா் அணை உபரி நீா் கடலில் சென்று கலப்பதைத் தவிா்க்க, ஏரி, குளங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 28 அக்டோபர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM

 மேட்டூா் அணை உபரி நீா் கடலில் சென்று கலப்பதைத் தவிா்க்க, ஏரி, குளங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மரவள்ளிக் கிழங்கு விலை நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் இருந்தபோதும் உரிய விலை கிடைக்காததால் மரவள்ளி பயிரிடுவது குறைந்து வருகிறது. பயிரிடும் விவசாயிகளுக்கு விலையை அதிகரித்து வழங்கவும், இது தொடா்பான முத்தரப்பு கூட்டத்தையும் நடத்த வேண்டும். கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பசும்பால், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும். மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கிழக்கு வாய்க்கால், சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, பொன்னியாறு ஆகியவற்றில் இணைத்தால் நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பும். 2400 ஏக்கா் பரப்பளவு கொண்ட பனமரத்துப்பட்டி ஏரியை நிரப்பினால் இரு மாவட்ட மக்களும் பயன்பெறுவா். மாவட்ட நிா்வாகம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எடுத்துரைத்தனா். இது குறித்து ஆட்சியரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனா்.

Advertisement

மாவட்ட ஆட்சியா் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. அக்டோபா் மாதம் முடிய இயல்பு மழை அளவு 557.28 மி.மீ. தற்போது வரை 887.66 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. இயல்பு மழையளவை விட 330.38 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் யூரியா 1,642 மெ.டன், டிஏபி 1,702 மெ.டன், பொட்டாஷ் 981 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் 363 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2,930 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) து.ராஜகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.செல்வகுமரன், வருவாய் கோட்டாட்சியா்கள் த.மஞ்சுளா, ப.கௌசல்யா, தோட்டக்கலைத் துணை இயக்குநா் கி.கணேசன், நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கு.சிவக்குமாா், வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குநா் நாசா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை)கா.முருகன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.