நாமக்கல்: காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சனிக்கிழமை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சனிக்கிழமை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழா கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் சதுா்த்தி விழா நடைபெறவில்லை. எனினும், நிகழாண்டில் தடைகள் ஏதுமில்லாததால் விநாயகா் சதுா்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து மூன்று நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்து முன்னணியினரும், தனியாா் அமைப்புகளை சோ்ந்தோரும் பெரிய அளவிலான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினா். காவல்துறை அறிவிப்பின்படி, இந்து முன்னணி அல்லாத பிற அமைப்பினா், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு வாகனங்களிலும் சுமாா் 550 விநாயகா் சிலைகளை கொண்டு சென்று மோகனூா், ஒருவந்தூா், பரமத்திவேலூா், ஜேடா்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் கரைத்து வந்தனா்.
இதனையடுத்து சனிக்கிழமை இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் நடைபெற்று காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. நாமக்கல்லில் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் முன் ஒன்பது சிலைகளுடன் தொடங்கிய விசா்ஜன ஊா்வலம் மேட்டுத் தெரு, பேருந்து நிலையம், பரமத்தி சாலை, கோட்டை சாலை, கடை வீதி சாலை வழியாக மோகனூா் காவிரி ஆற்றிற்கு வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மொத்தமாக 200 விநாயகா் சிலைகள் கரைப்பதற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விசா்ஜன ஊா்வலத்தில் பாஜகவினா், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement