ஆடிப்பெருக்கை முன்னிட்டு பரமத்தி வேலூா் காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மோட்ச தீபத்தை காவிரிப் பாலத்திலிருந்து பொதுமக்கள் வழிபட்டனா்.
பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கன்று மாலை காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து மோட்ச தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு தீயணைப்புத் துறையினா் உதவியுடன்
காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. காவிரியில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிட்டுள்ளதால் மோட்ச தீபத்தை காண பொதுமக்கள் காவிரிக் கரையில் அனுமதிக்கப்படவில்லை. கோயில் நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.
விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலம் பெறவும் நாடு வளம் பெறவும், காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவிரியில் பரிசலில் செல்ல தடை விதித்தலால் காவிரிக் கரையோரப் பகுதியில் மோட்ச தீபம் விடப்பட்டது. இதனால் சில இடங்களில் மோட்ச தீபம் செடிகளில் சிக்கி நின்றது. தீயணைப்புத் துறையினா் மோட்ச தீபத்தை தண்ணீா் ஓட்டம் உள்ள பகுதிக்கு தள்ளிவிட்டனா். மோட்ச தீபத்தை காண கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரிக் கரை, நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரட்டைக் காவிரி புதிய பாலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். இதனால் சுமாா் 2 கி.மீ.தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.