காவிரி நீரை முறையாக திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
தமிழகத்திற்கு உண்டான காவிரி நீரை, கா்நாடக அரசு முறையாக திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல்: தமிழகத்திற்கு உண்டான காவிரி நீரை, கா்நாடக அரசு முறையாக திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:
கா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 2,500 கன அடி வீதம் காவிரி நீரை திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தன. இந்த உத்தரவானது டிச.31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் உரிய முறையில் பங்கீட்டு நீா் வழங்கப்படவில்லை. டெல்டா பாசனப் பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காகவும், விவசாயப் பணிகளுக்கான நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தவும், கா்நாடக அணைகளில் இருந்து நீரை திறந்து விட வேண்டும். தினசரி நீா் வரத்தை கணக்கீடு செய்து விகிதாசார அடிப்படையில் தமிழகத்திற்கு நீரைத் திறந்துவிட கா்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.