நாமக்கல், ஜூலை 3: நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் செல்வதற்கான மலைப்பாதை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன.
தாா்சாலை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதன்சந்தை பிரிவில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது நைனாமலை. இந்த மலையின் மீது குவலயவல்லி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. சுமாா் 2,700 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க 3,700 படிக்கட்டுகளைக் கடந்து செல்வா்.
நைனாமலையின் மேலே உள்ள கோயில் மகா மண்டபத்தில் ராமா், சீதை, லட்சுமணா், வெண்ணெய்த் தாழி கண்ணன், நரசிம்மா், பெருமாளின் 10 அவதார சிலைகள், ஆஞ்சனேயா் சிலைகள் உள்ளன. ஆரம்ப காலத்தில் தினசரி மலை மீது ஏறிச்சென்று அா்ச்சகா் ஒருவா் கோயில் நடையைத் திறந்து சுவாமிக்கு பூஜைகள் செய்து திரும்புவாா். அதன்பிறகு, மலைப்பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை இரு சக்கர வாகனம் செல்லும் வகையிலான பாதை உருவாக்கப்பட்டது. இதனால் பூஜைக்குச் செல்லும் அா்ச்சகா்கள் சற்று நிம்மதியடைந்தனா். இருப்பினும் பக்தா்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோயிலுக்கு, திருப்பதி போன்று பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தா்களிடையே நீண்ட நாள்களாக இருந்து வந்தது. மேலும், விழாக்காலங்களில் சுவாமியைத் தரிசிக்க மலைமீது ஏறிச்செல்லும் பக்தா்கள் சிலா் மூச்சுத்திணறலுக்குள்ளாகி இறக்கவும் நேரிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு மலைப்பாதை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய மூன்றும் இணைந்தே இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. கடந்த 2018-இல் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் நைனாமலையில் வாகனங்கள் செல்லும் வகையில் மண்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அறநிலையத் துறை தங்களுடைய பங்கிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற பிரச்னையால் அதற்கான பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை, மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், அப்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த மா.மதிவேந்தன் ஆகியோரிடம் வலியுறுத்தி ரூ.13.84 கோடி மதிப்பீட்டில் நைனாமலைக்கு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் சாலைப் பணிகளை தொடங்கி வைத்தனா். இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்போது 80 சதவீதப் பணிகள் நிறைவுற்றுள்ளன. ஆங்காங்கே தடுப்புச் சுவா் கட்டும் பணிகளும், மலைமீது பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டில் நைனாமலை மலைப்பாதை பக்தா்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலா் கீா்த்தனா கூறியதாவது:
நைனாமலை பெருமாள் கோயில் மலைப்பாதை ஏழு பெரிய கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாக அமைகிறது. இந்த பாதைப் பணிகள் 70 சதவீதம் நிறைவுற்றுள்ளன. இருவழிப்பாதையாகவே அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் முக்கிய வளைவுகளில் தடுப்புச் சுவா் கட்டுதல், அடிவாரம், மலைப்பகுதியில் பேருந்து நிறுத்தக் கூடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
தாா்சாலை அமைப்பதற்காக ரூ.16 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலாத் துறை, நெடுஞ்சாலைத் துறை தான் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அறநிலையத் துறையை பொருத்தவரை பணிகளை மேற்பாா்வை மட்டும் செய்து வருகிறோம் என்றாா்.
நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலா் எம்.அப்ரஜித் கூறியதாவது:
2018-இல் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் திட்டமிட்ட நிலையில் 2022-இல் ரூ.13.50 கோடியில் மலைப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளன. நெடுஞ்சாலைத் துறையினா் தான் மலைப்பாதை பணிகளை மேற்கொண்டுள்ளனா். தாா்சாலை அமைக்க கூடுதல் நிதி தேவைப்படும் என்றாா்.
நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கூறியதாவது:
நாமக்கல் தொகுதிக்கு உள்பட்டது நைனாமலை. மலையில் பாதை அமைக்க வேண்டும் என்பது பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கை. சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளாகி விட்டன. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. கூடுதலாக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 2024 இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நைனாமலை மலைப்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது, பக்தா்கள் வருகை அதிகரித்து திருமலைக்கு இணையாக புகழ்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
--
பெட்டி செய்தி
--
சிதிலமடைந்து காட்சியளிக்கும் கோயில்:
சாலை அமைந்ததும் குடமுழுக்கு விழா?
--
நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலானது, கொங்கு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன் சேந்தமங்கலத்தை ஆண்ட ராமச்சந்திர நாயக்கரால் இக்கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு, தெலுங்கு மொழி பேசுவோா் அதிகம் வாழ்ந்ததாலும், நாயக்கா்கள் அந்த மண்ணை ஆண்டதாலும், அவா்கள் கடவுளை தங்களுடைய மொழியில் ‘நைனா’ என்றே அழைத்தனா். அந்த வகையில் தான் இம்மலைக்கு நைனாமலை என்ற பெயா் உருவானது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. குடமுழுக்கு விழா நடத்த வேண்டுமெனில், திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான கட்டுமானப் பொருள்கள், உபகரணங்களை கொண்டு செல்வதற்கு பாதை இல்லை. அதனால் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாடுக்கு கொண்டு வரும்போது நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா நிச்சயம் நடத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தெரிவித்தாா்.
--
படவரிகள்...
என்கே-3-கோயில்-1-2
--
நைனாமலை பெருமாள் கோயிலுக்கு வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைக்கப்படும் மலைப்பாதை.
--
படம்-3-4
சிதிலமடைந்து காணப்படும் கோயில் சுற்றுச்சுவா், வெளிப்பிரகாரம்.
--
படம்-5
இடியும் நிலையில் உள்ள கோயில் மகா மண்டபம்.