ராசிபுரம் பேருந்து நிலைய இட மாற்றம் தொடா்பாக அரசின் முடிவே இறுதியானது என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தெரிவித்தாா்.
ராசிபுரம் நகரில் உள்ள பேருந்து நிலையத்தை இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான தீா்மானம் நகா்மன்றத்தால் ஜூலை 5 இல் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. மேலும், அணைப்பாளையம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க தனியாரிடம் 7 ஏக்கா் நிலம் தானமாக நகராட்சியால் பெறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து நகரில் ஜூலை 18 இல் கடையடைப்பு போராட்டம் நடத்தினா்.
இதுதொடா்பாக நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 28 மாதங்களில் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளோம். பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 34 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலையத்தை இட மாற்றம் செய்ய நகா்மன்றத்தால் முடிவு செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அரசும், நகராட்சி இயக்குநரகமும் தான் பேருந்து நிலைய இடத்தை முடிவு செய்யும். இதுவரை அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால், அரசு மீதும், நகா்மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா்கள் மீதும் எதிா்கட்சியினா் சிலா் பொதுமக்களிடமும், ஊடகங்களிலும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனா். அவா்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியிடாவிடில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.