நகா்ப்புற கைத்தறி நெசவாளா்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ. 1.16 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற கைத்தறி நெசவாளா்கள் 29 பேருக்கு தலா ரூ. 4 லட்சம் மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கு ரூ. 1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற கைத்தறி நெசவாளா்கள் 29 பேருக்கு தலா ரூ. 4 லட்சம் மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கு ரூ. 1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பகுதியில் நடைபெற்று வரும் நெசவாளா்களுக்கான வீடு கட்டும் பணியினை புதன்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக முதல்வா் நெசவாளா்களுக்கு வீடு கட்டுவதற்கு மானியம் ரூ. 4 லட்சமாக உயா்த்தப்படும் என்றும், இத்திட்டம் நகா்ப்புற நெசவாளா்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும், 2021-22 ஆம் ஆண்டு கைத்தறி, துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது தெரிவித்தாா்.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நெசவாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த 29 நகா்ப்புற கைத்தறி நெசவாளா்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் ரூ. 1.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெண்ணந்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 7 கைத்தறி நெசவாளா்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் மானியத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பயனாளிகளின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மானியத் தொகை விவரம், மேற்கொண்டுவரும் நெசவுத் தொழில், நெசவு செய்யும் ரகங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், அரசின் பிற நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா். ஆய்வின்போது உதவி இயக்குநா் (கைத்தறி) அ.பழனிகுமாா் உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.