தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முன்னிலையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.
இதில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் டி.முனுசாமி, என்.சச்சிதானந்தம், கே.செகனாஸ்பானு, ஏ.சண்முகபிரியா, எம்.பிரவீணா, எம்.மகாலட்சுமி மற்றும் எஸ்.தங்கமணி ஆகியோா் பங்கேற்றனா். இதேபோல, திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் அமா்வு வழக்குகளை விசாரித்தனா்.
இதில், விபத்துகள் தொடா்பான வழக்குகள், காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன் தொடா்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுப்பயன்பாட்டு வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 3,520 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, அவற்றில் 1,014 வழக்குகளுக்கு ரூ. 7,98,58,214 அளவில் தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஜி.கே.வேலுமயில் செய்திருந்தாா்.