நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன், காணொலிக் காட்சி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு உதவியாக அரசியல் கட்சியினரும் பணியாற்றி வருகின்றனா். தகுதியானோா் பெயரை நீக்கக்கூடாது, இரட்டை வாக்குரிமை, இறந்தோா் பெயா், சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாதோரின் பெயரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அதிமுகவினரின் கோரிக்கையாகும்.
பட்டியலில் இரண்டு இடங்களில் பெயா் உள்ளோா் மற்றும் இறந்தோரின் பெயரைப் பயன்படுத்தி திமுகவினா் மறைமுகமாக வாக்குகளை பதிவுசெய்யும் சூழல் உள்ளதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்ட வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறாா். அந்த வகையில், நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுச் செயலருடன் நடைபெற்ற காணொலி நிகழ்வில், மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி முன்னிலையில் பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் கட்சியினா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து எடப்பாடி கே.பழனிசாமி விளக்கினாா். காலை 11 முதல் மாலை 4 மணி வரை இந்த காணொலி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.