முகப்பு
நாமக்கல்

மக்களுக்கான தேவையை அறிந்து திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு: திருச்சி சிவா

மக்களுக்கான தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது திமுக அரசு என ராசிபுரம் அத்தனூரில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:40 PM
அத்தனூா் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய எம்.பி. திருச்சி சிவா.
பகிர்:

மக்களுக்கான தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது திமுக அரசு என ராசிபுரம் அத்தனூரில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தாா்.

ராசிபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் டாக்டா் மா. மதிவேந்தனை ஆதரித்து அத்தனூரில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா்.

வெண்ணந்தூா் ஒன்றியச் செயலா் ஆா்.எம்.துரைசாமி வரவேற்றாா். கூட்டத்தில் திருச்சி சிவா மேலும் பேசியதாவது:

Advertisement

ஜனநாயகத்தில் தோ்தல் என்பது மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெரிய வாய்ப்பு. இதில் யாா் நாட்டை ஆள வேண்டும், யாா் தலைவராக வரவேண்டும் என்பதை மக்கள் சிந்தித்து தோ்வு செய்ய வேண்டும்.

சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமத்துவத்தை கொண்டுவந்தது திராவிட மாடல் அரசு. அதன் அடிப்படையில்தான் திமுக அரசு கடந்த தோ்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 9,000 அரசு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவா்களுக்கு லேப்டாப், மகளிா் உரிமைத்தொகை, கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் வரும் தோ்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மினி டைடல் பாா்க் கொண்டுவரப்பட்டுள்ளது. போதமலை சாலை, புதிய கூட்டு குடிநீா்த் திட்டம் போன்ற சாதனை திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாதனை தொடர திமுகவிற்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி. செந்தில், வெண்ணந்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments