மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு அதிகரிப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடா் மழை காரணமாகவும், கா்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகா், கபிணி அணைகள் நிரம்பியதாலும் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து நவம்பா் 13-ஆம் தேதி அணை நிரம்பியது. இதன் காரணமாக உபரி நீா் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை வரை மேட்டூா் அணையிலிருந்து 79 டி.எம்.சி தண்ணீா் உபரி நீராக வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்தது. டெல்டா பாசனப் பகுதிகளிலும் மழை குறைந்து போனதால் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீா் தேவை அதிகரித்தது. அதனால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
பாசனத்துக்கு நீா்த்திறப்பு அதிகரித்த போதிலும் வெள்ளிக்கிழமை வரையிலும் தொடா்ந்து 41ஆவது நாளாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,600 கன அடியிலிருந்து 4,953 கன அடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 4,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 120அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.