முகப்பு
சேலம்

காவிரிக் கதவணை பராமரிப்பு பணி:அத்தியாவசியப் பணிகள் பாதிப்பு

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரிக் கதவணை நீா்தேக்கப் பகுதியில் வருடாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அணைப் பகுதியில் தேக்கிவைக்கப்பட்ட நீா் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரிக் கதவணை நீா்தேக்கப் பகுதியில் வருடாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அணைப் பகுதியில் தேக்கிவைக்கப்பட்ட நீா் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனால் இந்நீா்நிலையினை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வந்த குடிநீா் விநியோகப் பணிகள், விவசாயப் பயன்பாட்டுக்கான நீரேற்று நிலையங்கள், விசைப்படகு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அத்தியவசியப் பணிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டப் பகுதியான பூலாம்பட்டியையும், மறுகரையில் ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டையினையும் இணைக்கும் வகையில், கதவணை நீா்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இக்கதவணைப் பகுதியில் அமைந்துள்ள நீா் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பரந்து விரிந்த இந்நீா் பரப்பில் இருந்து, எடப்பாடி பகுதிக்கான தனிக்குடிநீா்த் திட்டம், சேலம், இரும்பாலை தனிக்குடிநீா்த் திட்டம், இருப்பாளி கூட்டுக்குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீா்த் திட்டப் பயன்பாட்டுக்கு, கதவணைப் பகுதியில் நீா் உந்து நிலையங்கள் மூலம் தண்ணீா் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளுக்காக, கதவணைப் பகுதியில் தேக்கப்பட்டிருந்த தண்ணீா் பெருமளவு வெளியேற்றப்பட்டதால், குடிநீா் விநியோகிக்கும் பணி பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மேலும், கதவணையின் அருகில் உள்ள நீா்நிலைகளில் இருந்து செயல்பட்டு வந்த பல்வேறு பாசனத் திட்டப் பணிகள், போதிய நீா் ஆதாரம் இன்றி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேறுவகையான போக்குவரத்து வசதி இல்லாத இப்பகுதியில், கதவணை நீா்பரப்பில், சேலம் - ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை மறுகரைக்கு கொண்டு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் கடும் கோடையில் குடிநீரின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெற்றுவந்த அத்தியவசியப் பணிகள் பாதிப்புக்குள்ளாகாத வகையில், பராமரிப்புப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →