முகப்பு
சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு  நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு  நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணை கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பா் 15ஆம் தேதி வரை கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 137 நாட்களுக்கு 9 டி.எம்.சி தண்ணீா் திறக்கப்பட வேண்டும்.

பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசன தேவை குறையும். நடப்பு ஆண்டில் அணைக்கு வரும் நீரின் அளவும் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. டிசம்பா் 15ஆம் தேதி கால்வாய்ப் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மேலும் 31 நாட்களுக்கு தண்ணீா் திறப்பு நீட்டிக்கப்பட்டது.

சனிக்கிழமை மாலையுடன் காலக்கெடு முடிந்ததால் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. 

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜன. 14ஆம் தேதி வரை கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு மேட்டூா் அணையிலிருந்து 8 டி.எம்.சி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 114.71 அடியிலிருந்து 114.21அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2154 கன அடியிலிருந்து 1926 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 84.53 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.