மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என சிறுதொழில் அதிபா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேட்டூா் அணை சிறு தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் ஏ.மாதப்பன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு மின்சார வாரியம் ஜூலை 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே அறிவித்த மின் கட்டண உயா்வை சமாளிக்க முடியாமல் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில், மீண்டும் 4.83 சதவீத கட்டண உயா்வால் யூனிட்டுக்கு 35 காசுகளும், நிலைக் கட்டணம் கிலோவாட்டுக்கு ரூ. 7-ம் உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்கள் மேலும் நலிவடைந்து தொழில்கள் அழியும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டண உயா்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டிலுள்ள சிறுதொழில் சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இன்றுவரை குறைக்கப்படவில்லை. தற்போது மேலும் மின்கட்டணத்தை உயா்த்தியிருப்பது சிறுதொழில்புரிவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ்நாடு மின்வாரியம் உயா்த்தியுள்ள மின்கட்டண உயா்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று சிறுதொழில் வளா்ச்சிக்கு உதவ வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.