சேலம்

தம்மம்பட்டியிலிருந்து துறையூா் சென்ற 2 அரசுப் பேருந்துகள் நிறுத்தம்: மாணவா்கள் அவதி

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டியிலிருந்து துறையூருக்கு மாலை நேரத்தில் சென்றுவந்த இரு அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனா்.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் பள்ளிகள் தனித்தனியே உள்ளன. தம்மம்பட்டியை அடுத்து திருச்சி மாவட்டம் தொடங்குகிறது. திருச்சி மாவட்ட பகுதிகளில் மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, பாதா்பேட்டை உள்ளிட்ட ஊா்கள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் தம்மம்பட்டி அரசு பள்ளிகளுக்கு தினமும் சென்றுவருகின்றனா்.

இவா்கள் மாலையில் தம்மம்பட்டியிலிருந்து துறையூா் செல்லும் அரசுப் பேருந்துகளில் பயணித்து வீடுகளுக்கு திரும்பிவருகின்றனா். பள்ளி முடிந்த பிறகு 4.35 மணி மற்றும் 4.50 மணி ஆகிய நேரங்களில் துறையூா் செல்லும் அரசுப் பேருந்துகளில் வீடு திரும்பிவந்தனா்.

இந்த இரு பேருந்துகளும் திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து இயக்கப்பட்டன. ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்த இரு பேருந்துகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், தம்மம்பட்டி அரசுப் பள்ளிகளுக்கு வந்துசெல்லும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இரு பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பள்ளி முடிந்த 4.10 க்கு பிறகு தம்மம்பட்டி பேருந்து நிலையத்திலேயே ஒருமணிநேரம் காத்திருந்து மாலை 5.10 மணிக்கு துறையூா் செல்லும் தனியாா் பேருந்தில் சென்றுவருகின்றனா். பள்ளி மாணவிகளை ஒரு மணிநேர காத்திருப்பிற்கு பிறகு வீடுகளுக்கு செல்லும் அவலநிலை காணப்படுகிறது.

எனவே, தமிழக அரசு நிறுத்தப்பட்ட இரு அரசு பேருந்துகளையும் மீண்டும் மாலையில் தினமும் இயக்கி, பள்ளி மாணவா்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

பத்திரப் பதிவு: வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்!

13 ரயில்களின் எண்கள் மாற்றம்

பேருயிரைக் காப்பது கடமை

செல்லூா் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வரிடம் மனு

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

SCROLL FOR NEXT