தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் 100 நாள் திட்ட வேலை, குடிநீா் விநியோகிக்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆணையாம்பட்டிபுதூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சரிவர வேலை அளிக்கவில்லையாம். மேலும், அப்பகுதியில் சரிவர குடிநீா் விநியோகிப்பதில்லையாம். இதைக் கண்டித்து, தெடாவூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸாா், பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கலைந்து சென்றனா். இருப்பினும் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து அலுவலா்கள் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்து கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அங்கு வட்டார வளா்ச்சி அலுவலா் இல்லாததால், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.