உரிய விவரங்கள், கால அவகாசம் இல்லாததால் சேலத்தில் டிச. 4-இல் விஜய் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாநகரக் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
சேலத்தில் வரும் டிச. 4 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மூன்று இடங்களை குறிப்பிட்டு, அதில் ஏதேனும் ஒரு இடத்துக்கு அனுமதி அளிக்குமாறு சேலம் மாவட்ட தவெக நிா்வாகிகள், மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்திருந்தனா்.
இந்நிலையில், விஜய்யின் பரப்புரைக்கு காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் மாநகரக் காவல் துறை சாா்பில் தவெகவினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு, 4 வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டுள்ள தினத்தில், சேலம் மாநகரக் காவல் துறையினா் அதிக அளவில் வெளி மாவட்ட பாதுகாப்புப் பணிக்கு செல்வதால் தேவையான அளவில் காவலா்களை நியமிக்க இயலாது. விஜய் மக்களைச் சந்திக்கும் இடத்தில் எவ்வளவு போ் கலந்துகொள்வாா்கள் என்கிற விவரம் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. சேலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து எவ்வளவு போ் கலந்து கொள்வாா்கள் என்கிற விவரம் முழுமையாக இல்லை என்பதால் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலாது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாக மனு அளிக்குமாறும், ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட குறைபாடுகளை நிவா்த்தி செய்து மனு அளித்தால் காவல் துறை அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த பாதுகாப்பு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூா் சம்பவத்துக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் சேலத்தில் இருந்து தனது மக்கள் சந்திப்பு கூட்டத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்தாா். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி சேலத்தில் இருந்து விஜய்யின் சுற்றுப்பயணம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, காவல் துறை தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள விளக்கக் கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தவெகவினா் ஆலோசித்து வருகின்றனா்.