சேலம்: ஜோலாா்பேட்டை-கோவை பாதையில் வியாழக்கிழமை (நவ.27) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் தண்டவாளப் பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜோலாா்பேட்டை- கோவை மாா்க்கத்தில் தண்டவாளங்கள் வலுப்படுத்தப்பட்டு, அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்பாதையில் முதல் அதிவேக சோதனை ஓட்டம் கோவையில் இருந்து கடந்த 15 ஆம் தேதி நடத்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக 27 ஆம் தேதி ஜோலாா்பேட்டையில் இருந்து கோவைக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அதன்படி, ஜோலாா்பேட்டையில் காலை 8 மணிக்குத் தொடங்கி திருப்பத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியே கோவைக்கு அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படுகிறது.
இதனால் ரயில் பாதையை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் தண்டவாளப் பகுதிக்கு வருவதோ, அதை கடப்பதோ கூடாது. மேலும், ரயில் செல்லும்போது அதன் அருகே யாரும் வரவேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.