அரசு அனுமதி பெறாமல் செயல்படும் தனியார் பள்ளிகள்
கொடைக்கானல், ஜூலை 16: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் அரசு அனுமதி பெறாமல் பாதுகாப்பற்ற கட்டடங்களில் செயல்படும் பள்ளிகள் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
கொடைக்கானல், ஜூலை 16: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் அரசு அனுமதி பெறாமல் பாதுகாப்பற்ற கட்டடங்களில் செயல்படும் பள்ளிகள் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி, கிளாவரை, போலூர், கீழானவயல் பழம்புத்தூர், புதுப்புத்தூர் ஆகிய கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் 250 முதல் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந் நிலையில், பூம்பாறை, குண்டுபட்டி ஆகிய பகுதிகளில் நர்சரி பள்ளிகளை தனியார் நடத்தி வருகின்றனர். இதில் குண்டுபட்டி கிராமத்தில் கேரளத்தைச் சேர்ந்த ஜோயி என்பவர் சில மாதங்களுக்கு முன்பு நர்சரி பள்ளியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
இப் பள்ளியில் சுமார் 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு குண்டுபட்டியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் தனியார் பள்ளியின் மேற்கூரைத் தகரம் விழுந்ததில் அங்கு படித்த விடுதலை நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் சுபாஷினி என்ற மாணவிக்கு தலை. காலில் பலத்த
காயம் ஏற்பட்டது. இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து குண்டுபட்டி அரசு ஆரம்பப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் செல்லையா கூறியதாவது:
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, குண்டுபட்டி ஆகிய பகுதிகளில் தனியார்கள் பழைய கட்டடத்திலும், கிழங்கு வைக்கும் குடோன்களிலும், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களிலும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடங்களில் நர்சரி பள்ளிகள் நடத்தி வருகின்றனர்.
குண்டுபட்டி கிராமத்தில் கேரளத்தைச் சேர்ந்த ஜோயி என்பவர் தரமற்ற கட்டடத்தில் சில மாதங்களாகப் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். பள்ளிக்கூடத்தின் மேற்கூரை விழுந்ததில் மாணவி சுபாஷினி பலத்த காயமடைந்தது குறித்து பலமுறை ஊராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
இதுகுறித்து கொடைக்கானலில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தட்சிணா மூர்த்தி கூறியதாவது:
பூம்பாறை, குண்டுபட்டி ஆகிய கிராமங்களில் நர்சரி என்ற பெயரில் இரண்டு பேர் பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நான் பலமுறை பேசி அரசு அனுமதி மற்றும் உரிய ஆவணங்கள் பெற்று பள்ளிக்கூடம் நடத்த வேண்டும் என்று கூறினேன்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றனர். இதில் குண்டுபட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில் மேற்கூரை தகரம் விழுந்ததில் மாணவி சுபாஷினி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் பூம்பாறை, குண்டுபட்டி ஆகிய கிராமங்களில் அரசு அனுமதியில்லாமல் இயங்கி வரும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு ஒரு வாரத்திற்கு முன் தகவல் அனுப்பியுள்ளேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.