ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு சிதிலமடைந்த பசுமைக் குடில்
கொடைக்கானல்,ஜூலை22: கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான செட்டியார் பூங்காவில், ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பசுமைக் குடில் சிதிலமடைந்து காணப்படுவதால், அதனைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம்
கொடைக்கானல்,ஜூலை22: கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான செட்டியார் பூங்காவில், ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பசுமைக் குடில் சிதிலமடைந்து காணப்படுவதால், அதனைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் பிரையண்ட் பூங்கா மற்றும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள செட்டியார் பூங்கா ஆகிய இரு பூங்காங்களையும் தோட்டக்கலைத் துறை பராமரிக்கிறது. 10 பேர் அரசுப் பணியாளர்களாக உள்ளனர்.
இப்பூங்காக்களில், மேலும் 50 பேர் தினக்கூலிகளாக வேலை பார்க்கின்றனர். இதில் ஆண்களுக்கு ரூ. 100-ம், பெண்களுக்கு ரூ.85-ம் சம்பளமாகத் தரப்படுகிறது.
பிரையண்ட் பூங்காவில் பல லட்சம் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடந்தன.
இதேபோல, செட்டியார் பூங்காவிலும் 2002-ல் பொதுப்பணித் துறை சார்பில் ரூ. 5 லட்சம் செலவில் 3 சென்ட் இடத்தில் பசுமைக்குடில் அமைக்கப்பட்டது.
இந்தக் குடிலில் ஆர்க்கிடோரியம் எனும் தாவரம் அமைத்தும், பல்வேறு வகையான மலர்கள் செடிகள் அமைத்தும், சுற்றுலாப் பயணிகளுக்கும், தாவரவியல் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையிலேயே இந்தக் குடில் அமைக்கப்பட்டது. குடில் முழுவதும் சூரியஒளி படுமாறு உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்தக் குடிலில் மின்சார வசதியோ, செடிகளுக்குத் தேவையான தண்ணீர் வசதியோ இதுவரை செய்து தரப்படவில்லை.
பல ஆண்டுகளாகியும், இந்த பசுமைக்குடிலில் தாவரங்களோ அல்லது மலர்ச் செடிகளோ வைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தக் குடிலில் மேற்கூரை முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்குடில் பராமரிப்பின்றி உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பூங்கா பணியாளர்கள் கூறியதாவது:
பிரையண்ட் பூங்காவுக்கு அளிக்கும் முக்கியத்துவம், செட்டியார் பூங்காவுக்கு அளிக்கப்படுவதில்லை. பசுமைக்குடில் பல ஆண்டுகளாக வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.
பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்காவில் வேலை பார்க்கும் தினக் கூலி பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால், நாங்கள் பெரிதும் சிரமப்படுகிறோம்.
செட்டியார் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் வசதி கிடையாது. கழிப்பறை வசதி கிடையாது. மழைக்காலங்களில் ஒதுங்குவதற்குக் கூட பூங்காவில் இடமில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைகின்றனர் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அரசு அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானலில் உள்ள இரு பூங்காக்களிலும் நல்ல வருமானம் வருகிறது. கடந்த சீசனில் மட்டும் சுமார் ரூ. 6 லட்சத்திற்கு வருவாய் கிடைத்தது.
இந்தப் பூங்காக்களில் 35 பேர் மட்டுமே தினக் கூலிகளாகப் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டு அதற்குரிய சம்பளத் தொகை அளிக்கப்படுகிறது.
ஆனால், சிலரது தலையீட்டால் கூடுதலாக 15 பேர் பணியமர்த்தப்பட்டதால், ஊதியம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து மேலதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டால் தினக் கூலி பணியாளர்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்றார்.
இதற்கிடையே பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு சிதிலமடைந்துள்ள பசுமைக் குடிலைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.