முகப்பு
மதுரை

ராமநாதபுரத்தில் இரு பஸ் நிலையங்களும் சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம், ஏப். 26: ராமநாதபுரம் நகரில் உள்ள இரு பஸ் நிலையங்களும் போதுமான வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் நகரி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:35 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 10:50 PM

ராமநாதபுரம், ஏப். 26: ராமநாதபுரம் நகரில் உள்ள இரு பஸ் நிலையங்களும் போதுமான வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

ராமநாதபுரம் நகரில் பழையது, புதியது என இரு பஸ் நிலையங்கள் உள்ளன. நகரில் ரயில் நிலையம் எதிர்புறத்தில் பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. ரயிலைத் தவறவிட்ட பயணிகளும், ரயிலிலிருந்து இறங்கி வரும் பயணிகளும் பஸ்ஸில் செல்ல வசதியாக பழைய பஸ் நிலையம் இருந்தது.

பின்னர் மக்கள் தொகை அதிகரித்து விட்டதாலும், போதிய இடவசதி இல்லாததாலும் மேலும் ஒரு பஸ் நிலையம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழையது,புதியது என இரு பஸ் நிலையங்கள் இப்போது செயல்பாட்டில் இருந்து வருகின்றன. பழைய பஸ் நிலையம், நகரின் மையப் பகுதியில் இருந்தும் தற்சமயம் பயன்பாடின்றியே இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அங்கு சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, மினி பஸ்கள், ஆம்னி பஸ்களை நிறுத்தும் இடமாக மாற்றி, அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

Advertisement

புதிய பஸ் நிலையமும் ரயில் நிலையத்திற்கு அருகிலும் நகரின் மையப்பகுதியிலும் இருக்க வேண்டும் எனக் கருதி, ஒரு காலத்தில் ஆடு, மாடுகளை விற்பனை செய்யும் சந்தையாக இருந்த பகுதி புதிய பஸ் நிலையமாக மாற்றப்பட்டது. ராமேசுவரம்,காரைக்குடி, மதுரை ஆகிய வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் பஸ்களும் திரும்பிச் செல்ல வசதியான பகுதியாக மாட்டுச்சந்தை இடம் இருந்ததாலும், மாடுகள் விற்பனை குறைந்துகொண்டே போனதாலும் அந்த இடத்தையே புதிய பஸ்  நிலையமாக அதிகாரிகள் மாற்றினர்.

காலப்போக்கில் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தண்ணீர் தேங்கி நின்று, சாலை மிகவும் மோசமானதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பஸ்களை திருப்ப முடியாத நிலை, மழைநீரும் கழிவு நீரும் தேங்கி நிற்பது, இலவசக் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாவட்டத்தின் தலைநகருக்கு வரும் பயணிகள் முகம் சுளிக்க நேர்ந்தது.

இதனை உணர்ந்த ராமநாதபுரம் நகர்மன்றம், புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு தார்ச்சாலையாக மாற்றி, அதனை இம்மாதம் 14 ஆம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தது. ஆனால் இலவசக் கழிப்பறை வசதி செய்யாதது, பஸ்களை திருப்ப வசதியாக போதிய விரிவாக்கம் செய்யாதது, பயணிகள் நிற்குமிடத்திலும், வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும் மழைநீரும், கழிவுநீரும் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் புதிய பஸ் நிலையம் உள்ளது.

இந்தக் குறைபாடுகளை நீக்கி போதுமான வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் சீரமைக்கப்பட வேண்டும்.

புதிய பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தைக்காக கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் பாழடைந்து போய் உடைந்துவிடும் நிலையிலும், திறந்தவெளிக் கழிப்பறைகளாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் இருந்து வருகின்றன.  அவற்றை அகற்றிவிட்டு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து, கடைகளோ அல்லது பயணிகள் தங்கும் விடுதியோ கட்டி அரசுக்கு வருவாயைப் பெருக்கலாம்.

வாரம்தோறுóம் புதன்கிழமை கூடும் சந்தை வியாபாரிகள், புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் சாலையில் உட்கார்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக விற்பனை செய்து வருவதை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கும் கடைகள் கட்டிக் கொடுத்து நகராட்சிக்கு வருமானத்தை உயர்த்தலாம்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமானிடம் கேட்டபோது அவர் கூறியது:

புதிய பஸ் நிலையத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.50 லட்சத்தில் நடந்து முடிந்துள்ளது. மேலும் ரூ.15 லட்சத்தில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய பணி, மணல் கிடைக்காததால் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பஸ் நிலையம் அருகில் பாழடைந்த நிலையில் உள்ள சந்தைக் கடைகள் அனைத்தையும் இடிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு கிடைத்தவுடன் அவையனைத்தும் இடிக்கப்பட்டு, அங்கு கடைகள் கட்டப்படுவதுடன் பஸ் நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்யவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

சந்தை வியாபாரிகளுக்கு உழவர் சந்தை அருகில் இடம் ஒதுக்கித் தரப்படும்.

புதிய பஸ் நிலையத்தில் இலவசக் கழிப்பறை, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படுகிறது. அதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெறுகிறது.

பழைய பஸ் நிலையத்தை விரைவில் சீரமைத்து ஆம்னி பஸ், மினி பஸ் ஆகியவற்றை  நிறுத்தும் இடமாக மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.