சாத்தரசன்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகள் பாதிப்பு
சிவகங்கை, பிப். 3: காளையார்கோவில் ஒன்றியம், சாத்தரசன்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர்ந்து நிகழும் மின்வெட்டு, இடப் பற்றாக்குறை, மூட்டைகளைத் தூக்குவதில் நிலவும் பிரச்னைகள் காரணமாக நெல் கொள்முதல
சிவகங்கை, பிப். 3: காளையார்கோவில் ஒன்றியம், சாத்தரசன்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர்ந்து நிகழும் மின்வெட்டு, இடப் பற்றாக்குறை, மூட்டைகளைத் தூக்குவதில் நிலவும் பிரச்னைகள் காரணமாக நெல் கொள்முதல் பணி மந்த நிலையில் உள்ளது.
விவசாயிகள் நலனுக்காக சிவகங்கை மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சாத்தரசன்கோட்டை பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி முதல் நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு செங்குளம், செம்பனூர், தாயமங்கலம், மல்லல், பெரியகண்ணூர், சேம்பாத்து, நாடமங்கலம், அதப்படக்கி, மேலப்படாவூர் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் நெல்லைக் கொண்டு வருகின்றனர். நெல் கொண்டு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வரிசைப்படி நெல் கொள்முதல் நடைபெறுகிறது.
விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை நன்கு தூற்றி, உமி நீக்கிய பிறகே கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லைத் தூற்ற ஒரே ஓர் இயந்திரம் மட்டுமே இங்கு உள்ளது. அது ஒரு நாள் முழுவதும் இயங்கினால் 40 கிலோ எடை கொண்ட 600 முதல் 700 மூட்டை நெல்லைத் தூற்றும் திறன் கொண்டது. ஆனால், தொடங்கப்பட்ட 4 நாள்களில் இரு நாள்கள் இங்கு முற்றிலும் மின்சாரம் தடைபட்டது. இதனால் நெல்லைத் தூற்றி சுத்தம் செய்ய முடியவில்லை.
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக மின் பணிகள் நடைபெறுவதால், 2-ம் தேதி முழுவதும் மின்சாரம் இப் பகுதியில் இல்லாமல் இருந்தது. வியாழக்கிழமை (பிப். 3) வாராந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இப் பகுதியில் மின்சாரம் தடைபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் இங்கு நெல்லைக் கொண்டுவந்து டோக்கன் பெற்றுள்ளனர். அவர்களில் 16 பேரிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிறிய அளவு இடமே இருப்பதால், விவசாயிகள் அந்த குறுகிய இடத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கின்றனர். இந் நிலையில், டோக்கன் வரிசைப்படி அடுத்த விவசாயியை அழைக்கும்போது அவருடைய நெல் மூட்டைகளுக்கு முன்பாக வேறு விவசாயியின் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருப்பதால், அவரால் நெல்லை எடுக்க முடியாமல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணத்தால் பல விவசாயிகள் நாள்கணக்கில் இங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விவசாயிகள் வயலில் இருந்து நெல் மூட்டைகளை வாகனங்கள் மூலம் எடுத்து வருகின்றனர். வாகனங்களில் மூட்டைகளை ஏற்றும் தொழிலாளர்கள், மூட்டைகளை வாகனங்களில் ஏற்றுவது மட்டுமின்றி, நாங்கள்தான் கொள்முதல் நிலையங்களில் அவற்றை இறக்குவோம். ஏற்றுவதற்கு மட்டும் வர மாட்டோம் என்ற நிபந்தனையின்பேரில், மூட்டைக்கு ரூ. 8 கூலி பெறுகின்றனர்.
ஆனால், விவசாயிகள் பாதை விடாமல் மூட்டைகளைக் கண்டபடி அடுக்குவதால் நெல் மூட்டைகளை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை நாங்கள்தான் இறக்குவோம். அதற்கு மூட்டைக்கு ரூ. 3 கூலி வழங்க வேண்டும் என்கின்றனர் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள். ஏற்கெனவே நெல்லைத் தூற்றி சுத்தம் செய்து, எடைபோட்டு, 40 கிலோ மூட்டைகளாக்குவதற்கு மூட்டைக்கு ரூ. 15 வாங்கப்படுகிறது. இந் நிலையில், மூட்டையை இறக்குவதற்காக நாங்கள் கூடுதலாக ரூ. 3 செலவு செய்ய முடியுமா என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நெல்லில் 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 17 சதவீத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொண்டுவந்த விவசாயிகள் அவற்றை மீண்டும் கொண்டு செல்ல முடியாமல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்துள்ளதால், இடப் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது.