முகப்பு
மதுரை

ரூ. 20-க்கு 1 கிலோ அரிசி: மதுரையில் 35 டன் விற்பனை

மதுரையில் கூட்டுறவு அங்காடிகளில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில், இதுவரை 35 டன் அரிசி விற்பனையாகியுள்ளது.

Updated On : 12 மே 2013, 5:59 am IST
பகிர்:

மதுரையில் கூட்டுறவு அங்காடிகளில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில், இதுவரை 35 டன் அரிசி விற்பனையாகியுள்ளது.

   ஏழைகள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், கிலோ ரூ. 20-க்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சிறப்பங்காடிகளில் இத் திட்டம் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

   அதன்படி, மதுரையில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் திருமலை நாயக்கர் மகால் பகுதி, திருநகர், அழகப்பன் நகர் ஆகிய இடங்களில் உள்ள பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை சிறப்பு அங்காடி, பொன்னகரம் பகுதியில் உள்ள மதுரா கோட்ஸ் பண்டகசாலை சிறப்பு அங்காடி, பழங்காநத்தம் பகுதியில் பிஆர்சி பண்டகசாலை சிறப்பு அங்காடி ஆகியவற்றில் இத்திட்டம் துவங்கப்பட்டது.

Advertisement

Advertisement

   இந்த 5 சிறப்பு அங்காடிகளிலும் 20 ரூபாய் அரிசி, இதுவரை 35 டன் விற்பனை ஆகியுள்ளது. மதுரையில் முதல்கட்டமாக துவங்கப்பட்ட 5 அங்காடிகளிலும் 20 ரூபாய் அரிசிக்கு வரவேற்பு உள்ளது. பாண்டியன் சிறப்பு அங்காடிகளில் விற்பனை அதிகமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, டிஆர்ஓ காலனி மகளிர் பண்டகசாலை சிறப்பு அங்காடி, சிவாஜி கூட்டுறவு பண்டகசாலை, அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பண்டகசாலை, டிவிஎஸ் பண்டகசாலை, திருமங்கலம் மின்வாரிய ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய அங்காடிகளில் 20 ரூபாய் அரிசி விற்பனையைத் துவக்க இருப்பதாக, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

   திருமலை நாயக்கர் மகால் பகுதியில் உள்ள பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை சிறப்பு அங்காடியில், 20 ரூபாய் அரிசி விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் மதுரை சரக துணைப் பதிவாளர் ஆர். மாரீஸ்வரன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.