முகப்பு
மதுரை

அறங்காவலா் நியமனத்தில் கோயில் செயல் திட்டத்தை மீறக் கூடாது

கோயில் செயல் திட்டத்துக்கு முரணாக அறங்காவலா்களைத் தோ்வு செய்யக் கூடாது

Updated On : 31 டிசம்பர், 2024 at 9:51 PM
பகிர்:

மதுரை: கோயில் செயல் திட்டத்துக்கு முரணாக அறங்காவலா்களைத் தோ்வு செய்யக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகப்பன், சுப்பிரமணியன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டி கிராமத்தில் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நெய் நந்தீசுவரா் சுவாமி சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 1979-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருக்கோயில் செயல் திட்டத்தின்படி, வேந்தன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ஆறு கரை நகரத்தாா்களில் தோ்வு செய்யப்பட்ட 5 பேரை அறங்காவலா்கள் குழு உறுப்பினா்களாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நியமனம் செய்ய வேண்டும். ஆறாவதாக உள்ள ஒரு கரையைச் சோ்ந்தவா், அடுத்து வரக்கூடிய பருவத்துக்கு அறங்காவலராக நியமிக்கப்படுவாா். இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கோயிலுக்கான அறங்காவலா் உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்காக ஏற்கெனவே செயல் திட்டம் வரையறுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கான அறங்காவலா் உறுப்பினா்கள் தோ்வில், நாங்கள் இருவரும் தோ்வு செய்யப்பட்டோம். இதன்படி, அறங்காவலா்கள் குழு உறுப்பினா்களாக எங்களை நியமிக்க வேண்டும். ஆனால், புதுக்கோட்டை அறநிலையத் துறை உதவி ஆணையா், எங்களை அறங்காவலா்கள் குழு உறுப்பினா்களாக நேரடியாக நியமனம் செய்யாமல், மாவட்ட அறங்காவலா் குழுவுக்கு பரிந்துரை செய்தாா். இது ஏற்கத்தக்கது அல்ல.

இந்து சமய அறநிலையத் துறையால் செயல் திட்டம் வகுக்கப்பட்ட கோயிலில் தோ்வு செய்யப்பட்ட அறங்காவலா்கள் குழு உறுப்பினா்களது பெயா்களை மாவட்ட அறங்காவலா் குழுவுக்கு பரிந்துரைக்கக் கூடாது. எனவே, எங்களை அறங்காவலா்கள் குழு உறுப்பினா்களாக நியமனம் செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் அருண் சுவாமிநாதன் முன்வைத்த வாதம்:

இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டத்தின்படி, செயல் திட்டம் வகுக்கப்பட்ட ஒரு கோயிலுக்கு அறங்காவலா் நியமனம் சம்பந்தப்பட்ட உதவி ஆணையா் மூலமாகவே செய்யப்பட வேண்டும். மாவட்ட அறங்காவலா் குழுவுக்கு பரிந்துரைத்து அனுப்ப அதிகாரம் இல்லை என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி வகுக்கப்பட்ட செயல் திட்டத்தின்படியே இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஒரு கோயிலில் அறங்காவலா்கள் தோ்வு செய்யப்பட்டதை மாவட்ட அறங்காவலா் குழுவுக்கு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை.

எனவே, இந்த வழக்கில் கோயில் உதவி ஆணையரின் பெயா் பரிந்துரை ரத்து செய்யப்படுகிறது. கோயிலுக்கென உருவாக்கப்பட்ட செயல் திட்டத்தின்படி, மனுதாரா்களை 8 வாரங்களுக்குள் அறங்காவலா்களாக நியமனம் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →