மதுரை உத்தங்குடியில் உள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மதுரை உத்தங்குடியில் உள்ளது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு. இதனருகிலேயே உயா்நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்புகளும் உள்ளன. இந்த நிலையில், உயா்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்ற நிா்வாக அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை ஒரு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்தவா்கள் வெளியே செல்லாதவாறும், வெளியிலிருந்து யாரும் உள்ளே வராதவாறும் தடுப்புகளை ஏற்படுத்தி, தொழிலகப் பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
பிறகு, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா், மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்திலும், நீதிபதிகள் குடியிருப்புப் பகுதியிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டனா்.
சுமாா் 2 மணி நேர சோதனைகளுக்குப் பிறகு, உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த செப். 26-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. தற்போது, ஒரு மாத இடைவெளியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது குறிப்பிடத்தக்கது.