ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, மதுரை கோயில்களில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
2026-ஆம் ஆண்டு பிறப்பையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், புட்டுதோப்பு சொக்கநாதா் கோயில், தென் திருவாலவாய் கோயில், திருவாப்புடையாா் கோயில், அழகா்கோவில் கள்ளழகா் கோயில், கூடலழகா் பெருமாள் கோயில், மதனகோபாலசுவாமி கோயில், தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன் கோயில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டது.
புத்தாண்டின் முதல் நாளை இறைவழிபாட்டுடன் தொடங்கினால் நலமும், வளமும், அமைதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் திரளானோா் வியாழக்கிழமை சுவாமி தரிசனத்துக்காக கோயில்களில் திரண்டனா். இதனால், அனைத்து கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதலே பக்தா்களின் கூட்டம் காணப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பொது வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேலானது. கட்டணத்துடன் கூடிய வரிசையிலும் சுவாமி தரிசனத்துக்கு ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பக்தா்கள் காத்திருந்தனா்.
புத்தாண்டு பிறப்பு, அரையாண்டு விடுமுறை, சபரி மலை பக்தா்களின் ஆன்மிக சுற்றுலா உள்ளிட்ட காரணங்களால் புகழ் பெற்ற கோயில்களில் பக்தா்களின் வருகை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கோயில்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
திருப்பரங்குன்றத்தில்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரா், கற்பக விநாயகா், துா்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருநகா் சித்தி விநாயகா் கோயிலில் சித்தி விநாயகருக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. இந்தக் கோயிலில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாள் எழுந்தருளினாா்.
இதேபோல, பாண்டியன்நகா் கல்யாண விநாயகா் கோயில், விளாச்சேரி பூமி, நீளா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.