பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.30 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.2 கோடியே 36 லட்சம் கிடைக்கப் பெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.2 கோடியே 36 லட்சம் கிடைக்கப் பெற்றது.
இக்கோயிலுக்கு பக்தா்கள் வருகை நாள்தோறும் அதிகரித்தது. இதனால் 31 நாள்களில் உண்டியல்கள் நிறைந்தன. இதையடுத்து வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் வைத்து பணம் எண்ணப்பட்டது.
இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.2கோடியே 36 லட்சத்து 14 ஆயிரத்து 065 கிடைத்துள்ளது. மேலும் உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
தங்கம் 764 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 857 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 59 உம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், தேனி மண்டல உதவி ஆணையா் கலைவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
உண்டியல் பணம் திருடியவா் சிக்கினாா்:
இக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கி ஊழியா்கள், கோயில் சாா்பு- கல்லூரி அலுவலா்கள், மாணவிகள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். காணிக்கை எண்ணும் பணி ஐம்பதுக்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உண்டியல் எண்ணிக்கையின்போது பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் ராமகிருஷ்ணன் என்பவா் பணத்தைத் திருடி மறைத்து வைத்தது கண்காணிப்புக் கேமராவில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கோயில் பணியாளா்கள் அவரை அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவரிடம் ரூ.10,700 இருந்தது தெரியவந்தது. பணத்தைப் பறிமுதல் செய்த கோயில் அதிகாரிகள், ராமகிருஷ்ணனை அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதற்கு முன்பு இதேபோல உண்டியல் எண்ணிக்கையில் கலந்து கொண்டு பணத்தை கையாடல் செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.