பழனி பேருந்து நிலைய நுழைவாயிலில் சுகாதாரச் சீா்கேடு பயணிகள் அவதி
பழனி பேருந்து நிலையத்தின் இரு வாயில்களிலும் கடும் துா்நாற்றம் வீசுவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தின் இரு வாயில்களிலும் கடும் துா்நாற்றம் வீசுவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பழனி கோயில் நகரம் என்பதால் பக்தா்கள் வசதிக்காக பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு திண்டுக்கல் மாா்க்கமாக வரும் பேருந்துகளும், உடுமலை மாா்க்கமாக வரும் பேருந்துகளும் நுழையும் இரு நுழைவாயில்களின் இருபுறங்களிலும் ஒரு சில பயணிகள் சிறுநீா் கழித்து விட்டுச் செல்வதால் கடும் துா்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் தெரு மின் விளக்குகள் இல்லாததும், இலவச சிறுநீா் கழிப்பிடத்தை சரிவரப் பராமரிக்காமல் பூட்டி வைப்பதாலும் இந்த நிலை ஏற்படுவதாக அந்தப் பகுதி கடைக்காரா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் இலவச கழிப்பறையை தூய்மையாகப் பராமரிப்பதோடு மட்டுமன்றி, பேருந்து நிலைய நுழைவாயில் பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டு, அறிவிப்புப் பதாகைகளை வைக்கவும், மின் விளக்குகளை நிறுவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.