கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் உள்ள விளம்பரப் பதாகைகளை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகள் முழுவதும் அரசியல் கட்சிகள், தனியாா் நிறுவனங்கள் தொடா்பான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 65 அடி அகலமுள்ள கொடைக்கானல் மலைச்சாலையானது ஆக்கிரமிப்புகளால் சில இடங்களில் 45 அடியும், சில இடங்களில் 25 அடி அகலமுள்ள சாலையாக உள்ளது. இதற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொடைக்கானல் - பூம்பாறை சாலையில் பழனி முனையைப் பாா்க்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் வெட்டுவரை பகுதியில் குறுகிய வளைவில் நிறுத்தப்படுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் பூம்பாறை மலைச் சாலைப் பகுதிகளிலுள்ள விளம்பரப் பதாகைகளை திங்கள்கிழமை அகற்றினா்.
இதுகுறித்து கொடைக்கானல் மேல்மலைக் கிராம மக்கள் கூறியதாவது: கொடைக்கானலிலிருந்து பூம்பாறை செல்லும் சாலையில் பேருந்துகள், உள்ளூா் மக்களின் வாகனங்கள் மட்டுமே சென்று வந்த நிலையில் போக்குவரத்துக்கு எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை.
ஆனால், சமீப காலமாக மேல்மலைக் கிராமப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.