முப்பெருமைகள் கொண்ட ராமேசுவரத்தை புனித தலமாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, இந்து முன்னணி கோட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்ட பொதுக் குழுக் கூட்டம் திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் முத்துக்குமாா், சேவுகன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
இந்த கூட்டத்தில், உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள கோயிலில் அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரா் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஸ்தலம், தீா்த்தம், மூா்த்தி என மும்பெருமைகளையும் கொண்ட ராமேசுவரத்தை இந்துக்களின் புனித தலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து முன்னணி அமைப்பின் திண்டுக்கல் மாவட்டத் துணைத் தலைவா் வினாத் ராஜ் நன்றி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நகர, ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.