மணல் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் அதிகம் பதிவு
மதுரை ஊரகப் பகுதிகளில், கடந்த 2012 ஆம் ஆண்டு சூதாட்டம், மணல் உள்ளிட்ட கனிம வளம் திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், ஊரகப் பகுதியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஊரகப் பகுதிகளில், கடந்த 2012 ஆம் ஆண்டு சூதாட்டம், மணல் உள்ளிட்ட கனிம வளம் திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், ஊரகப் பகுதியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவனியாபுரம் பகுதியில் நடைபெற்ற தனிநபர் விரோதக் கொலைகள், சிந்தாமணி அருகே நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு, அதன்தொடர்பாக நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை.
இதுதொடர்பாக, மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பு விவரம்:
2011- ஆம் ஆண்டு மதுரை ஊரகப் பகுதியில் 3 ஆதாயக் கொள்ளை வழக்குகளும், 18 கூட்டுக்கொள்ளை வழக்குகளும், 156 கொள்ளை வழக்குகளும், 65 கன்னக்களவு வழக்குகள் என மொத்தம் 242 வழக்குகள் பதிவாகி உள்ளன.
ஆனால், 2012-ல் 1 ஆதாயக் கொள்ளை, 7 கூட்டுக்கொள்ளை, 120 கொள்ளை, 50 கன்னக்களவு என மொத்தம் 178 வழக்குகளே பதிவாகி உள்ளன.
அத்துடன் 2011-ல் 337 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால், 2012-ல் குற்ற வழக்குகள் 272 ஆகக் குறைந்துள்ளது.
அரசின் கனிமவளச் சொத்தான மணல் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடர்பாக, 2011-ல் 69 வழக்குகள் பதிவாகின. ஆனால், 2012-ல் 140 மணல் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தனிப்படை அமைத்து மணல் திருட்டை தடுத்ததால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஊரகப்பகுதியில் அரசு பஸ்களை சேதப்படுத்தியதாக 2011-ல் 51 வழக்குகள் பதிவான நிலையில், 2012 ஆம் ஆண்டில் 226 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டம்: ஊரகப்பகுதியில் 2011-ல் சூதாட்டம் தொடர்பாக 101 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2012-ல் 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2011-ல் கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவான நிலையில், 2012-ல் 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு அனுமதியின்றி மது விற்றதாக 2011-ல் 1406 வழக்குகளும், 2012-ல் 1522 வழக்குகளும் பதிவாகி உள்ளன. குழந்தைத் திருமணம், தொடர்பாக கடந்த ஆண்டு 14 வழக்குகளும், கந்துவட்டி வசூலித்ததாக 2011-ல் 3 வழக்குகள் பதிவான நிலையில், 2012-ல் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறைந்த விபத்துகள்: 2011-ல் ஊரகப்பகுதிகளில் 491 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 553 பேர் இறந்துள்ளனர். 2430 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், 2012-ல் 470 விபத்துகளில் 508 பேர் உயிரிழந்திருப்பதும், 2258 பேர் காயமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறையினரின் தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரத்தால் ஊரகப்பகுதிகளில் விபத்துகள் குறைந்திருப்பதையும் காவல்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஊரகப்பகுதிகளில் காவல்துறை சார்பில் நேரடியாக மக்களிடம் மனுக்களைப் பெற்றது உள்ளிட்ட நடவடிக்கையால், 2011 -ஐ ஒப்பிடுகையில் 2012-ல் குற்றங்கள் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.