மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த 406 கிராம் தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து மின் மோட்டாரில் மறைத்து, நூதன முறையில் கடத்திவரப்பட்ட 406.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து மின் மோட்டாரில் மறைத்து, நூதன முறையில் கடத்திவரப்பட்ட 406.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில், வந்த பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராம்குமார் கொண்டுவந்த மின் மோட்டாரின் காயில் பகுதியில் தங்கத்தை உருக்கி சுற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வந்த தங்கத்தின் எடை 406.5 கிராம். இதன் மதிப்பு ரூ. 12 லட்சத்து 71 ஆயிரத்து 125 ஆகும்.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, ராம்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.