முகப்பு
மதுரை

அரசு மருத்துவமனை மின் தூக்கியில் திடீர் பழுது: மூச்சுத் திணறலால் நோயாளிகள் மயக்கம்

மதுரை அரசு மருத்துவமனையில் தானியங்கி மின்தூக்கியில் திங்கள்கிழமை சிக்கிக்கொண்ட நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் 1

Updated On : 15 மே, 2018 at 2:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

மதுரை அரசு மருத்துவமனையில் தானியங்கி மின்தூக்கியில் திங்கள்கிழமை சிக்கிக்கொண்ட நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் 1 மணி நேரம் போராடி மீட்டனர். அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அண்ணாபேருந்து நிலைய பகுதியில் அரசு மருத்துவமனையின் விரிவாக்க கட்டடம் உள்ளது. இங்கு விபத்து சிகிச்சைப்பிரிவு, தலைக்காயம் முதுகெலும்பு மற்றும் எலும்பு முறிவு, முடநீக்கியியல் ஆகிய சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இந்நிலையில், விபத்தில் தலைக்காயமடைந்த உள்நோயாளி லட்சுமணனை அவரது உறவினர்கள் ஸ்டெச்சரில்' வைத்து முதல் தளத்தில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்கேன் எடுத்து முடிந்ததும், வார்டுக்கு கொண்டு வருவதற்காக தானியங்கி மின்தூக்கியில் சென்றுள்ளனர். மின்தூக்கியில், லட்சுமணன், மேலும் இரண்டு நோயாளிகள் உள்பட 6 பேர் இருந்தனர். இந்நிலையில் திடீரென மின்தூக்கி பழுதானது. இதனால் அதில் இருந்த 6 பேரும் சிக்கிக்கொண்டனர். முதல்தளம் மற்றும் தரைத்தளத்துக்கும் இடையே மின்தூக்கி பழுதடைந்து நின்ற நிலையில் அவர்கள் குரல் எழுப்பியும் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.
தொடர்ந்து அரைமணி நேரத்துக்கும் மேலாக உதவி ஏதுமின்றி மின்தூக்கிக்குள் 6 பேரும் தவித்தனர். இதைத்தொடர்ந்து, மின்தூக்கியின் கதவை பலமாக தட்டியுள்ளனர். இதில் அவ்வழியாக சென்ற ஒருவர் மின்தூக்கியின் கதவு தொடர்ந்து தட்டுவதை கவனித்து மின்தூக்கிக்குள் ஆள்கள் சிக்கியிருப்பதை அறிந்து மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் அளித்தார்.
ஊழியர்கள் உடனடியாக மின்தூக்கி பராமரிப்பு நிறுவனத்துக்கு தகவல் அளித்து காத்திருந்தனர். சுமார் முக்கால் மணி நேரம் ஆகியும் பராமரிப்பு நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. மேலும் மின்தூக்கியில் இருந்த மின்விசிறியும் இயங்காததால் உள்ளே சிக்கிய 6 பேரில் லட்சுமணன் மற்றும் இரு நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
அவர்களுடன் இருந்தவர்கள் வியர்வை கொட்டியவாறு பரிதவித்தனர். இதற்கிடையே நிலைமை மோசமாவதை உணர்ந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக கடப்பாறை கம்பியை கொண்டு வந்து மின்தூக்கியின் கதவு இடைவெளியில் நெம்பி கதவை திறந்தனர். இதையடுத்து மின்தூக்கிக்குள் சிக்கிய 6 பேரையும் மீட்டனர். அவர்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.