தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்று பேசியது: இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கட்டளைப்படி 2005-இல் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக நான் பதவி வகித்தபோது தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டர், பிரபல வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தற்போதைய புதுதில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் நிலைக்குழு உறுப்பினர்களாய் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு ஆலோசனை வழங்கினர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு 14 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருக்கிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தச் சட்டத்தைக் கையில் எடுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மாநில அரசு, நீதிமன்றம் உள்ளிட்ட மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தால் இயங்கும் எந்த துறையும், வரி கொடுக்கும் மக்களுக்கு தகவல் தர வேண்டிய கட்டாயத்தை இச் சட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் இந்த சட்டத்துக்கு கட்டுப்படாது என்று சொல்வது வேதனைக்குரியது. நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளின் மீதுதான் தலையிட முடியாது.
ஆனால் அவற்றின் நிர்வாகங்கள் மக்களின் வரிப்பணத்தில் இயங்குபவை. இந்த சட்டத்துக்கு அவை கட்டுப்பட வேண்டும். அப்போதுதான் இந்த சட்டம் முழுமை அடையும் என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கும் சுதர்சன நாச்சியப்பன் பதிலளித்தார்.