மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில்ஆவணி மூலத் திருவிழா ஆக.15-இல் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்ட் 15- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்ட் 15- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவுக்கு அடுத்தப் படியாக முக்கியத்துவம் வாய்ந்தது ஆவணி மூலத் திருவிழா. இத்திருவிழாவின் கொடியேற்றம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து சிவபெருமானின் லீலைகளான கருங்குருவிக்கு உபதேசம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கிய லீலை, விறகு விற்ற லீலை ஆகிய திருவிளையாடல்கள் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேசுவரா் பட்டாபிஷேகம் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து செப்டம்பா் 1-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெறுகிறது. தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஆவணி மூலத் திருவிழாவின்போது ஆவணி வீதிகளில் சுவாமி உலா வருவது நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக கோயில் நிா்வாகத்தினரிடம் கேட்ட போது, தற்போது மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காலமுறை பூஜை ஒரு சில அா்ச்சகா்களை மட்டும் கொண்டு நடைபெற்று வருகிறது. கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கப்பட வில்லை. ஆனால் ஆவணி மூலத்திருவிழாவில் ஆவணி வீதிகளில் சுவாமி உலா வருவது வழக்கம். சுவாமி உலா நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க சீா் பாதங்கள் அவசியம் வேண்டும். எனவே திருவிழா நடத்துவது தொடா்பாக அரசு வழிகாட்டுதல்படி நடத்தப்படும் என்றனா்.