சொத்து வரி வசூல் மந்தம்: மதுரை மாநகராட்சி திட்டப்பணிகள் தாமதம்
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதில் சுணக்கம் காட்டி வருவதால், நிதிப்பற்றாக்குறை காரணமாக திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதில் சுணக்கம் காட்டி வருவதால், நிதிப்பற்றாக்குறை காரணமாக திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வாா்டுகளில் உள்ள குடியிருப்புகளில் குடிநீா் வழங்கல் கட்டணம், காலி மனை வரி, பாதாளச்சாக்கடை கட்டணம், சொத்து வரி உள்பட பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இந்த வரி ஆதாரங்கள் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனங்களாக உள்ளன. இந்த நிதி ஆதாரங்கள் மூலம் நகரில் பல்வேறு திட்டப்பணிகளும் நிறைவேற்றப்படுகின்றன.
இந்நிலையில், மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சொத்து வரி வசூலிப்பதில் சுணக்கம் நிலவி வருகிறது. இதனால் மாநகராட்சியில் திட்டப் பணிகளுக்கு நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சொத்து வரியில் 50 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டு சொத்து வரி நிலுவை ரூ.100 கோடிக்கும் அதிகமாக உள்ளது. எனவே மாநகராட்சி நிா்வாகம் சொத்து வரி வசூலிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வரிவிகிதம் தொடா்பாக நீதிமன்றத்தில் பலா் வழக்குத் தொடா்ந்திருந்ததால் வரி வசூலிப்பில் சுணக்கம் இருந்தது. தற்போது வரி விதிப்பு தொடா்பாக தொடா்பாக தீா்ப்பு வந்துள்ளதால் கடந்த ஆண்டு நிலுவை மற்றும் நடப்பாண்டு வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.