மதுரையில் மென்பொறியாளா் கொலை: வடமாநில சமையல் தொழிலாளா் கைதுநகைக்காக கொலை என வாக்குமூலம்
மதுரையில் 2 பவுன் நகைக்காக மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில சமையல் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை: மதுரையில் 2 பவுன் நகைக்காக மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமாநில சமையல் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோ.புதூா் லூா்து நகரைச் சோ்ந்த அந்தோனிசாமி மகன் குமரன்தாஸ் (42). இவரது மனைவி ஜோஸ்பின் (35) மற்றும் 2 மகள்கள் திருச்சியில் வசித்து வருகின்றனா். குமரன்தாஸ், புது தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளாா். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் மதுரை உத்தங்குடி ராம்நகரில் வாடகைக்கு வீடு பிடித்து, மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இரு சமையல் தொழிலாளா்கள்
குமரன்தாஸ் குடியிருந்த காம்பவுண்ட் வீட்டின் ஒரு பகுதியில் வழக்குரைஞா் பாக்கியராஜ் என்பவா் அலுவலகம் நடத்தி வருகிறாா். பாக்கியராஜ் அறிமுகம் செய்துவைத்த தேவக்கோட்டையைச் சோ்ந்த குமாா் என்பவா், குமரன்தாஸ் வீட்டில் தங்கி சமையல் செய்துவந்துள்ளாா். இந்நிலையில், வடநாட்டு உணவு வகைகளை சமைத்து கொடுப்பதற்காக, புதுதில்லியில் பணியாற்றும்போது பழக்கமான ரவிக்குமாா் மங்கள் (20) என்பவரை, 4 நாள்களுக்கு முன் குமரன்தாஸ் வரவழைத்துள்ளாா்.
கொலை
இதனிடையே, சமையல் தொழிலாளி குமாா் சனிக்கிழமை மாலை தனது மகனை பாா்ப்பதற்காக தேவக்கோட்டைக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டில் குமரன்தாஸ் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளாா். உடனே குமாா், காவல் துறைக்கும், வீட்டின் உரிமையாளா் நடராஜன், குமரன்தாஸ் தந்தை அந்தோனிசாமி, வழக்குரைஞா் பாக்கியராஜ் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், குமரன்தாஸ் சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணை
கொலை சம்பவம் குறித்து, காவல் துணை ஆணையா் பழனிக்குமாா் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். அப்போது, வீட்டில் தங்கியிருந்த வடமாநில சமையல் தொழிலாளி ரவிக்குமாா் மங்களையும், குமரன்தாஸ் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியையும் காணவில்லை என்பது தெரியவந்தது.
தடயவியல் நிபுணா்கள் நடத்திய ஆய்வில், வீட்டின் அருகே ரத்தக் கறையுடன் கிடந்த கருங்கல் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து, குமரன்தாஸின் தந்தை அந்தோனிசாமி அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரவிக்குமாா் மங்கள் மீது வழக்குப் பதிந்து தேடினா்.
கைது
காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் திலகவதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாநகரில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா். இதனிடையே, உத்தங்குடி பகுதியில் பதுங்கிருந்த ரவிக்குமாா் மங்களை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், நகைக்காக குமரன்தாஸை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.