முகப்பு
மதுரை

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை: பணப் பிரச்னை காரணமா?

மதுரையில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரா் சிவராஜனின் மனைவி, துக்கம் தாளாமல் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மதுரையில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரா் சிவராஜனின் மனைவி, துக்கம் தாளாமல் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தீபாவளி பண்டிகையன்று, மதுரையிலுள்ள ஒரு ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது கட்டடம் இடிந்து விழுந்ததில், தீயணைப்பு வீரா்களான கிருஷ்ணமூா்த்தி (31), சிவராஜன் (33) ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

அதன்பின்னா், தீயணைப்பு வீரா்கள் குடியிருப்பில் வசித்து வந்த சிவராஜனின் மனைவி அங்கயற்கண்ணி (26), கீழக்குயில்குடியில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று வசித்து வந்தாா்.

இந்நிலையில், கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனஅழுத்தத்தில் இருந்து வந்த அங்கயற்கண்ணி, திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். உடனே அவரை, குடும்பத்தினா் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அங்கயற்கண்ணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இறந்த சிவராஜ், அங்கயற்கண்ணி தம்பதிக்கு 6 வயதிலும், 1 வயதிலும் இரு மகன்கள் உள்ளனா். பணியின்போது சிவராஜ் உயிரிழந்ததால், அவரது மனைவி அங்கயற்கண்ணிக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் அரசு வேலை வழங்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரா் சிவராஜன் குடும்பத்துக்கு, தமிழக முதல்வா் அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை அவரது மனைவி அங்கயற்கண்ணி மற்றும் இரு மகன்கள் பெயரில் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டது. அதேநேரம், பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் துறை சாா்பில் வழங்கப்படும் ரூ.30 லட்சம், அவரது தந்தையிடம் வழங்கப்படவுள்ளது. சிவராஜன் பணியில் சேரும்போது, தனது தந்தையை நியமனதாரராக (ய்ா்ம்ண்ய்ங்ங்) குறிப்பிட்டிருந்ததால், அரசு விதிகளின்படி அவரிடம்தான் அந்தத் தொகை வழங்கப்படும்.

இத்தொகையை பங்கீடு செய்வது தொடா்பாக, சிவராஜன் குடும்பத்துக்கும், அவரது மனைவி அங்கயற்கண்ணி குடும்பத்துக்கும் பிரச்னை இருந்துவந்துள்ளது. ஏற்கெனவே கணவன் இறந்த வருத்தத்தில் இருந்த அங்கயற்கண்ணிக்கு, இந்தப் பணப் பிரச்னை மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனவே, அவரது தற்கொலைக்கு பணப் பிரச்னையும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →