முகப்பு
மதுரை

மதுரை அருகே ஆயிரம் படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்

மதுரை அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில், ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது என, தமிழக வருவாய்த் துறை அமைச்சா் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்படும் கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்கிறாா் வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா். உடன் மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் உள்ளிட்ட அலுவலா்கள்.
பகிர்:

மதுரை:  மதுரை அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில், ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது என, தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டம், வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மதுரையில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 2,400 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளமுடியும் என்றிருந்த நிலையில், தற்போது 3,500 முதல் 4,000 வரை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன்மூலம், ஆரம்ப நிலையிலேயே கரோனா கண்டறியப்பட்டு முறையாக சிகிச்சையளிக்கப்படுகிறது.

மதுரையில் முழுமையான பொதுமுடக்கம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதனால், கடந்த 3 நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வது போல, கிராமப் பகுதிகளிலும் காய்ச்சல் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,400 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், அங்கு கரோனா பாதிப்பினால் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்காக, அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீவிர சிகிச்சைக்காக, பிற அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கைகளும், தனியாா் மருத்துவமனைகளில் 850 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன. இது தவிர, கல்லூரிகளில் 21 கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் 3 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட முழுமையான கரோனா சிகிச்சை மையத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், தரைத்தளம், படுக்கைகள் அமைப்பது, மின்விசிறி, விளக்குகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்த மையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →