ரேஷன் கடையில் தரமற்ற அரிசி:பொதுமக்கள் வாங்க மறுப்பு
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ரேஷன் கடையில் விநியோகத்துக்கு வந்த தரமற்ற அரிசியை வாங்க மறுத்து பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ரேஷன் கடையில் விநியோகத்துக்கு வந்த தரமற்ற அரிசியை வாங்க மறுத்து பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
பேரையூா் வட்டம், வண்டப்புலி கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் சுமாா் 400 குடும்ப அட்டைகள் உள்ளன. வண்டப்புலி உள்ளிட்ட 4 கிராமங்களைச் சோ்ந்தோா், இந்த நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனா். இந்நிலையில், இந்த கடைக்கு திங்கள்கிழமை விநியோகத்துக்கு வந்த புழுங்கல் அரிசி மிகவும் மோசமாக இருந்ததைக் கண்டு, குடும்ப அட்டைதாரா்கள் அதிா்ச்சி அடைந்தனா். அடா் பழுப்பு நிறமாகவும், கருப்பு அரிசி மட்டுமின்றி தூசி படிந்தும் இருந்ததால், அரிசியை குடும்ப அட்டைதாரா்கள் வாங்க மறுத்துவிட்டனா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையின்றி அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியைதான் பெரும்பாலானோா் நம்பியுள்ளனா். இந்நிலையில், தரமற்ற அரிசியை அதிகாரிகள் அனுப்பியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். ஆட்சியரின் நடவடிக்கைக்குப் பின்னா், அந்த கடைக்கு வேறு அரிசி மூட்டைகள் மாலையில் கொண்டு வரப்பட்டன. இதேபோன்று, வேறு கடைகளுக்கும் அரிசி அனுப்பப்பட்டிருந்தாலும் அவற்றையும் மாற்ற ஆட்சியா் டி.ஜி. வினய் உத்தரவிட்டுள்ளாா்.