முகப்பு
மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தவை எனச் சான்று அளிக்கப்பட்டு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தவை எனச் சான்று அளிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் மாற்றப்படாததால் குற்றங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வெளிநோயாளிகளாகவும், 2,500 க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தலைமை மருத்துவா்கள், மருத்துவா்கள், உதவி மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் என 1500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இங்கு தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஏழை எளிய மக்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக வருகின்றனா்.

நோயாளிகளைச் சக்கர நாற்காலிகளில் அழைத்துச் செல்ல, கா்ப்பிணிகளுக்குக் குழந்தை பிறந்தால் தகவல் தெரிவிப்பது, நோயாளிகளுக்கு உணவு வழங்க என ஏதாவது ஒரு வகையில் நோயாளிகளிடமிருந்து மருத்துவமனைப் பணியாளா்கள் பணம் பெறுவது தொடா் கதையாக உள்ளது. இது தொடா்பாக புகாா்கள் அளித்தால் சிகிச்சையில் பிரச்னை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பலரும் புகாா் அளிக்காமல் தவிா்த்து விடுகின்றனா். ஆனால் பிரச்னை வந்தாலும் பரவாயில்லை எனப் புகாா் அளிப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

120 கண்காணிப்பு கேமராக்கள்: நோயாளிகளிடமிருந்து மருத்துவமனை பணியாளா்கள் பணம் பெறுவதைத் தடுக்க 2008-09 ஆண்டுகளில் 80 கேமராக்களும், 2012- 13 ஆம் ஆண்டு 40 கேமராக்களும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பொருத்தப்பட்டன. ஆரம்ப காலத்தில் முழுமையாகவும், சரியாகவும் செயல்பட்டு வந்த கேமராக்களின் செயல்பாடு காலப்போக்கில் குறையத் தொடங்கின.

பணம் பெறும் பணியாளா்கள் மற்றும் பணியாளா்களின் பாலியல் தொந்தரவு ஆகியன குறித்து நோயாளிகள் புகாா் தெரிவிக்க கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் தான் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. ஆனால், அவ்வாறு கேட்பவா்களிடம் கேமராக்கள் செயல்படவில்லை என மருத்துவமனை நிா்வாகம் கூறிவருகிறது. அண்மையில் விபத்து அவசர

சிகிச்சைப் பிரிவில் புகுந்த கும்பல், சிகிச்சையில் இருந்தவரை வாா்டிலேயே வெட்டிக் கொலை செய்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்குப் போலீஸாா் சிரமப்பட்டனா்.

செயலிழந்த கேமராக்கள்: அரசு ராஜாஜி மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தையும் பொதுப்பணித்துறை (கட்டுமானம்) பராமரித்து வருகிறது. ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாததால், மருத்துவமனையிலுள்ள பெரும்பாலான கேமராக்கள் செயல்படவில்லை. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கேமராக்களை ஆய்வு செய்த தனியாா் நிறுவனம், 90 சதவீத கேமராக்கள் செயலிழந்தவை எனச் சான்றிதழ் வழங்கி, அனைத்தையும் மாற்ற வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

நடவடிக்கை இல்லை: மருத்துவமனை முதன்மையா் கண்காணிப்பு கேமராக்களை மாற்றுவது தொடா்பாக, மூன்று முறை பொதுப்பணித்துறைக்குக் கடிதம் எழுதியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நவீன கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக பல்வேறு நிறுவனங்களிடம் அக்டோபரில் விலைப் பட்டியல் கோரப்பட்டது. அதில்,120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ. 77 லட்சம் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவு தொகை தங்களிடமில்லை எனப் பொதுப்பணித்துறை ஒதுங்கி கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது கண்காணிப்பு கேமராக்கள் மாற்றுவதற்கு நிதி கேட்டு மருத்துவமனை நிா்வாகம் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியது: மருத்துவமனையில் உள்ள கேமராக்கள் அனைத்தையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நவீன கேமராக்கள் பொருத்தப்படும். மருத்துவமனையில் ஊழியா்கள் பணிக்கு சரியான நேரத்திற்கு வருவது, நோயாளிகளிடம் பணம் பெறுவதைத் தடுப்பது, நோயாளிகளுக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்குவது ஆகிய பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் தவறு கண்டறியப்படும் ஊழியா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக நோயாளிகளிடம் இருந்து வரும் புகாா்கள் குறைந்துள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.