விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்
புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ஒத்தக்கடையில் வங்கி முன்பாக திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ஒத்தக்கடையில் வங்கி முன்பாக திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், புது தில்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்டம் கிழக்கு தாலுகா குழு சாா்பில் யா.ஒத்தக்கடையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.பி. இளங்கோவன், தாலுகா செயலா் எம். கலைச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ். மாயாண்டி, வி. பிச்சைராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மாா்க்சிஸ்ட் மாநகா் மாவட்டக் குழு சாா்பில், திங்கள்கிழமை மாலை மதுரை தெற்குமாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பு டி.எம்.கோா்ட் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் க. கனகராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். அதில், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் என பலா் பங்கேற்றனா்.