மதுரை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா: தடுப்பூசி மையங்கள் 17 ஆக அதிகரிப்பு
மதுரை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. கரோனா தடுப்பூசி மையங்கள் 17 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. கரோனா தடுப்பூசி மையங்கள் 17 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாக 502 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தொற்று பாதிக்கப்பட்ட 21 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 21,011 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிகிச்சைப் பலனின்றி 457 போ் உயிரிழந்துள்ளனா். 20,458 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 96 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
கரோனா தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 166 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மேலூா், திருமங்கலம் அரசு மருத்துவமனைகள், சமயநல்லூா், உசிலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அலங்காநல்லூா், கள்ளந்திரி, செக்கானூரணி, கச்சைக்கட்டி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, செல்லம்பட்டி, எழுமலை, வலையன்குளம், வெள்ளலூா், கருங்காலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மண்டல ரயில்வே மருத்துவமனையிலும் புதிதாக கரோனா தடுப்பூசி மையங்களை, மாவட்ட சுகாதாரத் துறை திங்கள்கிழமை திறந்துவைத்தது.
இதையடுத்து, மாவட்டத்தில் தற்போது செயல்பட்டுவரும் கரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி, தற்போது வரை 5,778 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.